Pages

Tuesday, December 29, 2009

இறைவா ! ஆர் யூ ஹியரிங் !!


எத்தனை கோடி இன்பம் வைத்தாய் = எங்கள்
இறைவா ! இறைவா !! இறைவா !!

என உற்சாகக்குரல் கொடுப்பார் பாரதி.

மேலும் பாடுவார்:

சித்தினை அசித்துடன் இணைத்தாய் = அங்கு
சேரும் ஐம் பூதத்து வியனுலகு சமைத்தாய்.
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பல பல நல் லழகுகள் சமைத்தாய்.

ஆகா ! உலகே வண்ணக்களஞ்சியமாய்ப் பரிணமிக்கிறதே 1 எனக் குதூகலிப்பார் பாரதி.

பார்க்கும் இடமெல்லாம் நந்தலாலா = நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையா... நந்தலாலா..

கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா = நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா ...

என உலகை ஒரு வண்ணப்பூங்காவிலே இசையின் சிகரமாகக் காண்பான் பாரதி.

பாரதி தன் வாழ் நாளில் படாத துன்பம் இல்லை. இருப்பினும் துன்பத்தை துன்பமாக நினையாது தன் வாழ்க்கைக்கு அதில் இன்பம் சுரக்கும் ஊற்றுக்களைத் தேடித் தன் மனம் நிறைவு கண்டான்.

வள்ளுவர் தெளிவாகச் சொல்வார்:

இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்,
துன்பம் உறுதல் இலன்.

இன்பமும் துன்பமும் இயல்பே எனும் மன நிலை கொண்டவன் துன்பமடைய மாட்டான் எனும் கருத்தை வள்ளுவர் சுட்டிக்காட்டுவதை கவனிக்க.

இன்பமும் துன்பமும் நமது நோக்கைப் பொறுத்ததே. மனித வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் பகலிரவு போன்றல்லவா உள்ளது.

இரவு வரும். இருப்பினும் இரவு போய் பகலவன் உதிக்கத்தான் செய்வான்.

நிற்க.

பல்வேறு இன்ப துன்பங்களுக்கிடையே வருடா வருடம் வருவது தவறாது வருவது புத்தாண்டு தினம். அது இன்று.

உலகெங்கும் மக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துச் செய்திகளை அனுப்பி, பரிசுகளை அனுப்பி,
மன மகிழ்வர்.

அன்றாட வாழ்க்கையில் தாம் படும் அல்லல்களுக்கிடையேயும் ஒரு நாள், ஒரு கண நேரம் மாந்தரெல்லாம் மகிழ்ச்சி அலைகளில் நீந்துவது மன நிறைவைத் தருகின்றது.

எல்லா இனத்தவர்க்கும், எல்லா மதத்தோருக்கும், எல்லா நாட்டினர்க்கும் பொதுவான ஒரு சொல்
உண்டு என்றால் அது ஹாப்பி ந்யூ இயர்.

இயர் என்றால் வருடம். ஹியர் என்றால் கேள்.

இந்த இயர் எப்போதுமே ஹாப்பி ஆகவே இருக்க, இறைவா ! நாங்கள் உன்னை வேண்டுகிறோம்.


எல்லோரும் புத்தாண்டு தினத்தில் ஒரு உறுதி எடுத்துக்கொள்வார்கள்.
சிலர் இன்ன இன்ன வேண்டும் என்று இறைவனை வேண்டுவார்கள்.

உலகம் அனைத்துமே வளமுற்று, சிறப்புற்று செழிக்கவேண்டும் உலகத்தார் யாவருமே அன்பு மழையில் திளைக்கவேண்டும் என வேண்டுபவரில் மேடம் கவி நயா அவர்களும் இருக்கிறார்கள்.

அவரது சூப்பர் பாடல் ஒன்று இங்கே !!!

அவர்கள் வலையில் இட்டதை, என்னால் இயன்றவரை ஹம்ஸ்த்வனி ராகத்தில் பாட முயன்றிருக்கிறேன்.

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்.



இறைவா ! ஆர் யூ ஹியரிங் !! ???




Monday, December 14, 2009

எங்க ஊர்லே இத ஜூ அப்படின்னு சொல்லுவாங்க !



எங்க ஊர்லே இத ஜூ அப்படின்னு சொல்லுவாங்க ! உங்க ஊர்லே டெம்பிள் அப்படின்னு சொல்றீங்க ..இல்லயா ?

நான் அசந்து போனேன். எனது ஆறு வயது பேரனின் கேள்விகளுக்கு சரியான பதில் தெரியவில்லை.
தனது கின்டர் கார்டன் ஸ்கூலிங்கை அமெரிக்காவில் செய்த என் பேரன், இப்பொழுது தமிழகத்தின் சிங்காரச்
சென்னையில் ஒரு துவக்கப்பள்ளியில் படிக்கிறான்.

நமது கடவுள் சிலைகளை எல்லாம் பார்க்கும்பொழுது அவன் கேட்கும் கேள்விகள் ஏராளம். எனது பூஜை அறையில் இருக்கும் சாமிகளைப் பார்த்து அவனது முகத்தில் ஏகப்பட்ட வினாக்கள் !

ஏன் இத்தனை கைகள் ! இத்தனை ஆயுதங்கள் ஏன் அவர்களிடம் ?
ஒவ்வொரு கைக்கும் என்ன பணி அப்படின்னு சொல்லிமுடிப்பதற்குள் எனக்கு மூச்சு முட்டிவிடுகிறது.
அறுபத்தி எட்டு வரை எனக்கு வராத ஐயங்கள் இந்த ஆறு வயது சிறுவனுக்கு வருகிறது.

எல்லா சாமியும் நம்ம மாதிரி மூஞ்சி இருக்கும்பொழுது, ஏன் பிள்ளையாருக்கு மட்டும் யானை மூஞ்சி ?
திடிரென வந்ததா ? புறக்கும்பொழுதே அப்படித்தான் இருந்ததா ?

இதெல்லாம் போதாதென்று, ஒரு போடு போட்டான் பாருங்கள். நான் அசந்து போய்விட்டேன்.

தாத்தா ! இந்தியாவிலே டெம்பிள்லே யானை, சிங்கம், குரங்கு, சேவல், காளை மாடு, பசு மாடு, கிளி, மயில், எலி, காக்கா எல்லாம் இருக்கு. அமெரிக்காவிலே இதெல்லாம் இருக்கற இடத்த நாங்க ஜூ அப்படின்னு சொல்லுவோம்.

நம்ம டெம்பிள்லே இதெல்லாம் இருக்கா ? என்னடா சொல்றே அப்படின்னு கேட்டேன்.

"இங்க வந்து பாரு. ஒரு யானை பிள்ளையாரா இருக்கு. இங்க ஒரு குரங்கு.. கேட்டா அனுமார் அப்படிங்கற் நீ.. ஒரு சிங்க மூஞ்சியோட இந்த நரசிம்மர் இருக்காரு.
ஒரு பாம்பு சிவன் கழுத்துலே இருக்கு. ஒரு காளை மாடு வேற அவர் வாசல்லே இருக்கு. இங்க பாரு ஒரு சிங்கத்து மேல இந்த துர்கை சாமி இருக்கு. ஒரு சேவலும், மயிலும் முருகன் கோவில்லே இருக்கு. ஒரு கருடன் கூட இங்க இருக்கு. விஸ்னு பாம்பு மேலே படுத்துக்கிட்டு இருக்கார். அடடே ! ஒரு காக்கா மேல இந்த சனி சாமி இருக்கு. இங்க பாரு. பைரவர் சாமி நாய் மேலே உட்கார்ந்துகினு இருக்குதே ! மூஞ்சூர் மேல
பிள்ளையார் இருக்கார்... புலி மேல அய்யப்பன் வர்றாரு... "

"மிருகங்கள், பறவைகள் எல்லாமே ஜூவிலே தானெ இருக்கணும் !

இத்தன இருக்கற இடம் ஜூ தானே !! நீயே சொல்லு தாத்தா..." என்றான்.

எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

இந்த வாகனங்களுக்குப் பின்னால் இருக்கும் தத்துவங்களை விளக்கினால், அச்சிறுவன் புரிந்து கொள்வானா என்பதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை.

எளியதாக யாரேனும் விளக்க இயலுமா ?

ஒன்று மட்டும் தோன்றியது. மனுசங்க நாம மனுசங்களா இல்லாம போடற
சண்டையெல்லாம் கவனிச்சா உலகமே ஒரு ஜூ என்று தான் நினைத்தேன்.

இந்த ஜூவை பொறுமையுடன் மேய்க்கறானே அவனைத் தான் ஆண்டவன் எனவும் சொல்கிறோமோ ?