Pages

Monday, December 10, 2012

விஷ்ணுபுரம்

 திருமதி சுசீலா அவர்களின் வலைப்பதிவில் கண்ட அழைப்பும் 
விஷ்ணுபுரம் விருது பற்றிய தகவலும் 

விஷ்ணுபுரம் விருது விழா 2012

தமிழ்ப் புனைகதை இலக்கியத்தின் முதன்மையான ஆக்கங்களில் ஒன்றான 'ஜெயமோகனின் ’விஷ்ணுபுரம்' நாவலின் பெயரால் உருப்பெற்றுள்ள இலக்கிய நண்பர்களின் வட்டம் 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்'.ஜெயமோகனின் படைப்புக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தாலும்,அவரது இலக்கிய ஆளுமையின் பால் விளைந்திருக்கும் ஈர்ப்புக் காரணமாகவும் பலப் பல ஊர்களிலும் நாடுகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒத்த மனம் கொண்ட நண்பர்களின் குழு ஒருங்கிணைந்து ஏற்படுத்தியிருக்கும் அமைப்பு இது. இலக்கியக் கூட்டங்கள்,சந்திப்புக்கள்,நிகழ்வுகள் ஆகியவற்றை அவ்வப்போது நடத்துவதன் வழி இலக்கிய வாசிப்புப் பயிற்சியை மேம்படுத்திக் கொள்வதோடு, பிற இலக்கிய,சமூக அமைப்புக்கள் கௌரவிக்கத் தவறிய..அல்லது உரிய வகையில் அங்கீகாரம் தந்திராத இலக்கியப் படைப்பாளிகளுக்கு விழா எடுத்துச் சிறப்பிப்பதையும்,ஒவ்வொரு ஆண்டும் ஜெயமோகன் அவர்களால் அடையாளப்படுத்தப்படும் சிறந்த படைப்பாளி ஒருவருக்கு ’விஷ்ணுபுரம் இலக்கிய விருது’என்ற ஒன்றை (ரூ.50,000)அளிப்பதும் இவ்விலக்கிய வட்டத்தின் குறிப்பான இலக்குகள். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் திரு ஆ.மாதவனுக்கு இவ் விருது முதன் முறையாக 2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற விழாவில் அளிக்கப்பட்டது.2011ஆம் ஆண்டுக்கான ‘விஷ்ணுபுரம் விருது’கரிசல் இலக்கியப் படைப்பாளியாகிய திரு பூமணிக்கு வழங்கப்பட்டது. 2012-ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்பட இருக்கிறது. டிசம்பர் 22-ஆம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் இசைஞானி இளையராஜா அவர்களின் முன்னிலையில் விழா நடைபெற இருக்கிறது.

விழாவில் நாஞ்சில் நாடன், கல்பற்றா நாராயணன், ஜெயமோகன், விமர்சகர் மோகனரங்கன், இயக்குனர் சுகா, ராஜகோபாலன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு தேவதேவனை வாழ்த்த இருக்கிறார்கள்.



விஷ்ணுபுரம் விருதைப் பெறும் கவிஞர் தேவதேவனை வாழ்த்துவதோடு கலை,இலக்கிய ஆளுமைகள் பலரும் பங்கேற்கவிருக்கும் இவ் விழாவுக்கு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டும் என,'விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட'த்தின் ஓர் உறுப்பினர் என்ற உரிமையோடு அனைவருக்கும் அன்பான அழைப்பு விடுக்கிறேன்.

பி.கு;ஆர்வமுள்ள நண்பர்கள் இந்த அழைப்பிதழைத் தங்கள் வலைத் தளங்களிலும்,முகநூலிலும் வெளியிடக் கோருகிறேன்.

No comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி